Emergency

Abirami Lifeline

பித்தப்பையை முழுமையாக அகற்றலாமா?

டாக்டர் செந்தில்,

அபிராமி மருத்துவமனை, கோவை.

மனித உடலில் இருக்கும் தேவை இல்லாத ஓர் உறுப்பு. சின்னஞ்சிறிய உறுப்பு என்றாலும் அதில் பிரச்னை ஏற்படும் நேரத்தில் வலி உயிரே போவது போல் இருக்கும். இப்போது எந்த உறுப்பு என்பதை யூகித்து இருப்பீர்கள். ஆம், பித்தப்பை (Gall bladar) என்ற உறுப்புதான் அது.

இது, கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை (bile) தற்காலிகமாக சேகரித்து வைக்கிறது. இந்தப் பித்தப்பை சுருங்கும் போது, இதில் இருக்கும் பித்த நீர் சிறுகுடலுக்குச் செல்கிறது. இந்த பித்த நீர்தான் குடலின் செரிமானத்துக்கு உதவிகரமாக இருக்கிறது. இந்த இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும் போது கற்கள் உருவாகி, பெரும் அவஸ்தையைக் கொடுக்கிறது.

கற்கள் உருவாதல்:

பித்தப்பையில் ஏற்படும் முக்கியமான பிரச்னை கற்கள் உருவாவதுதான். சாப்பிடும் போது உணவில் இருக்கும் கற்களைத் தெரியாமல் விழுங்கிவிட்டால், பித்தப்பையில் போய் சேர்ந்துவிடுமோ என்று பயப்படத் தேவை இல்லை. இந்தப் பித்தப் பை கற்கள் என்பது சிறு கற்கள் போன்ற ஒரு படிமானப் பொருள். இதை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

முதல் வகை கொலஸ்ரோல் கற்கள். இது உணவில் கொழுப்புச் சத்து அதிகமாக சேர்த்துக் கொள்பவர்களுக்கு உருவாகிறது. குறிப்பாக உடல் பருமனாக உள்ளவர்களுக்கும் திடீரென்று உடல் இளைப்பவர்களுக்கும் இந்தக் கற்கள் உருவாகிறது. மேலும் கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பவர்களுக்கும் ஏற்படுகின்றன. கொலஸ்ரோல் என்ற கொழுப்புப் பொருள் அதிகமாக உள்ளதால் இவ் வகைக் கற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

இரண்டாவது பித்தச் சாயத்தில் இருந்து உருவாகும் பிக்மென்ட் கற்கள். இது, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் விரைவாக உடைவதாலோ அல்லது பித்த நீர்ப் பையில் பாக்டீரியா அல்லது குடல் புழுக்கள் சேர்வதாலோ உண்டாகின்றன.

மூன்றாவது வகையானது கொலஸ்ரோல் மற்றும் பித்தச் சாயம் இரண்டும் சேர்ந்து உருவாவது ஆகும். இந்தப் பிரச்னையில் பெண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

பெண்களுக்குப் பித்தப்பை கற்கள் உருவாவதற்கான காரணங்களை ஆங்கிலத்தில் பைஃவ் எஃப் (5 தி) என்று கூறுவார்கள்.

  1. பெண்கள் (Female)
  2. உடல் பருமன் (Fatty)
  3. வாயுத் தொல்லை (Flatulent)
  4. குழந்தைப் பேறு (Fertile)
  5. நாற்பது வயது (Forty)

பெண்களுக்கு இந்த ஐந்து காரணங்களும் இருக்கும்போது, பித்தப் பையில் கற்கள் உருவாகின்றன. இந்தப் பித்தக் கற்களை அல்ட்ரா சவுண்டு சோதனை மூலம் எளிதாகக் கண்டறிய முடியும். பித்தப் பையில் கற்கள் இருக்கின்றன என்று தெரிந்த பின்பு முழுமையான உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம். உணவில் எண்ணெய், கொழுப்புப் பொருட்கள் சேர்வதை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

பித்தப் பைக் கற்கள் உள்ள எல்லோருக்குமே, பெரிய பாதிப்புகள் இருப்பதில்லை. அதாவது பித்தப் பைக் கற்கள் உள்ளவர்களில் சிலருக்கு எந்த பாதிப்புமே இல்லாமல் இயல்பாக இருப்பார்கள். கற்களின் எண்ணிக்கை கூடும்போதும், வேறு பிரச்னைகள் தோன்றும்போதுதான் அவர்களைப் பாதிக்கும்.

பித்தப்பையில் கற்கள் தோன்றுவதால் பித்தப்பையில் கிருமித் தோற்று, பித்தக் குழாயில் அடைப்பு, பித்தப் பையில் அழற்சி போன்றவை ஏற்படலாம்.

பித்தப் பைக் கற்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புக்கள்

கற்கள் உருவாகி இருக்கும் பட்சத்தில் வயிற்றில் மிகக் கடினமான வலி உண்டாகும். வயிற்றின் மேல் பாகத்தில் வலது புறம் வலி இருந்துகொண்டே இருக்கும். இதனை அல்சர் என்று பலரும் தவறாக நினைத்து மருந்து சாப்பிடுவார்கள். வலி குறையாத பட்சத்தில்தான் இந்த பித்தப்பைக் கற்கள் கண்டறியப்படுகிறது. பசி உணர்வு இல்லாமல் இருப்பது, அடிக்கடி ஏப்பம், அஜீரணம், வயிறு உப்புசம் ஏற்படுவதும் அறிகுறிகளே.

தொடர்ந்து வாயுத் தொல்லை இருப்பதும், தொடர் காய்ச்சலும் பித்தப்பை கற்களின் அறிகுறியாகவே கருதப்படுகிறது. மேலும் மஞ்சள் காமாலை தோன்றும் பட்சத்தில் பித்தப்பைக் கற்களை பரிசோதனை செய்துபார்க்க வேண்டியது மிகவும் அவசியம். இதனை உடனடியாக கவனிக்கவில்லை என்றால் இந்தக் கற்கள், பித்த நாளத்தில் விழுந்து அடைத்துக் கொள்ளும். இதனால் மஞ்சள் காமாலை உண்டாகவும் வாய்ப்புள்ளது. கணைய அழற்சி, சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. பித்தக் கற்கள் அகற்றப்படாத சூழலில், இது புற்று நோய்க் கட்டியாக மாறவும் வாய்ப்பு உண்டு.

சிகிச்சை முறை:

பித்தப் பை கற்கள் சர்க்கரை நோயாளிகளிடம் கண்டறியப்பட்டால், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால், பித்தப்பை அழுகி வெடித்துவிட வாய்ப்பு உண்டு. இந்த நிலையில் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடும்.

பொதுவாக பித்தப்பை கற்களுக்கு மருந்துகள் சரியான முறையில் பலன் கொடுப்பது இல்லை. மாத்திரைகள் சாப்பிடும் வரை கற்கள் மறைந்து… வலி இல்லாமல் இருக்கும். மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடனே வலி உருவாகி, கற்கள் திரும்பவும் உண்டாகி அதிக அளவில் வேதனை கொடுக்கும். இந்த மாத்திரைகள் விலை அதிகமானவை என்பதுடன் பக்கவிளைவுகளும் உருவாக்குபவை என்பதால், இவற்றைத் தொடர்ந்து உட்கொள்வதன் காரண்மாக கல்லீரலில் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அதனால் பித்தப்பையில் கற்கள் கண்டறியப்பட்டால், அதனை உடனே அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதுதான் நல்லது. பித்தப் பைக் குழாயின் கீழ்ப் பகுதியில் மட்டும் கற்கள் உள்ளவர்களுக்கு, நேரடியாக கற்களை மட்டுமே அகற்றலாம். தோயானியின் வாய் வழியாக கேமராவுடன் கூடிய ஒரு குழாயினை செலுத்தி, கற்களை அகற்றிவிட முடியும்.

சுற்கள் மற்ற பகுதியிலும் இருந்தால் பித்தப்பையை முழுமையாக அகற்றுவதுதான் சிறந்தது. ஏனெனில் பித்தப் பை சுருங்கி விரியாமல் கெட்டுப் போவதால்தான் இவ்வாறு கற்கள் உற்பத்தியாகின்றன. இப்படிப் பழுதடைத்த பித்தப் பை உள்னே இருப்பதால் உடல் நலத்துக்கு பல்வேறு கேடுகள்தான் விளையுமே தவிர, நன்மை எதுவும் கிடையாது. அதனால் பித்தப்பையை அகற்றுவதன் காரணமாக எந்தப் பக்கவிளைவும் ஏற்படுவது இல்லை. மேலும்பித்தப் பையை அகற்றுவதால் ஜீரணத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.

லேப்ராஸ்கோபி சிகிச்சை மூலம் வயிற்றைக் கிழிக்காமல் மிகச் சிறிய துளைகள் மூலம் கருவிகளை அனுப்பி பித்தப்பையை வெட்டி அகற்றிவிட முடியும். அழுகிப் போன பித்தப் பையையும் இந்த சிகிச்சை முறையில் அகற்றிவிட முடியும். லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை காரணமாக நோயாளிக்கு அதிக வலியும் ரத்த இழப்பும் இருக்காது என்பதால் விரைவில் வீடு திரும்பி, வழக்கம் போல் பணிகளைச் செய்ய முடியும். அதனால் வயிற்றின் மேல் பகுதியில் தொடர்ந்து வலி இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்… அது பித்தப் பை கற்களாகவும் இருக்கலாம்.

Scroll to Top